திருச்சி மாவட்டம் பிராட்டியூர் கிராமம் ஸ்ரீ கௌரி நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி சேவா டிரஸ்ட் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கருண பூரணி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் புணராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தின் விரிவாக்க திருப்பணிகள் தொடங்கி நவராத்திரி மண்டபம் சேஷாத்ர பாலாஜி ஸ்ரீ கோலவிழி பத்ரகாளியம்மன் சன்னதி, ஸ்ரீ மடப்பள்ளி ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டு ஆலய வளாகம் முழுவதும் கோபுரங்கள் உட்பட பஞ்சவர்ண நிறங்கள் தீட்டி ஆலய முகப்பில் நிழற்குடை அமைத்து திருப்பணி வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பால விநாயகர் கருணா பூரணி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோட்டை நாச்சியார் ஸ்ரீ கோலவிழி பத்ரகாளியம்மன் ஆகியோருக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெறுவதற்காக கடந்த 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கி மகா கணபதி ஹோமம் வாஸ்து ஹோமம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சனம் கொண்டுவரப்பட்டு முதல் கால யாக பூஜை உடன் தொடங்கி 15ஆம் தேதி இரண்டாம் கால பூஜை விசேஷ மூல மந்திர ஓமம் மாலை மூன்றாம் கால பூஜையுடன் இன்று 16-ம் தேதி காலை 10.15 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு ஸ்ரீ வித்யா ராஜேஸ்வரி சேவா டிரஸ் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.