திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் 180 -வது ஆண்டு விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு புனித வளனார் கலை மனைகளில் அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பல்வேறு பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்..
அதனைத் தொடர்ந்து மாணவர்களிடையே அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில். ஜோசப் கல்லூரியில் படித்தவர்களுக்கு திருச்சியில் தனி மரியாதை உண்டு, கிறிஸ்தவ பெருமக்கள், பேராயப் பெருமக்கள் நடத்துகின்ற எந்த கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் அதில் ஒழுக்கத்தையும், நேர்மையையும் கடைப்பிடிக்கிற இடமாக இருக்கும் என பெற்றோர்களும் நாங்களும் நம்புகிறோம். கலைஞர் அவர்கள் பெயரில் எவ்வளவோ பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் கலைஞர் அவர்களுக்கு பெரியார் என்ற பெயரில் பட்டம் வழங்கப்பட்டது இந்த ஜோசப் கல்லூரியில் தான், குறிப்பாக திருச்சியின் கட்டமைப்பையும் வளர்ச்சி பணியை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் எனக்கு வழங்கி இருக்கிறார், இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிற 21 மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி இந்த முறை முதல் பரிசை பெற்றிருக்கிறது. திருச்சியில் 20 ஆண்டுகளாக போடப்படாத சாலைகள் போடப்பட்டுள்ளன, அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கப்பட்டு இருக்கிறது,
எங்கும் இல்லாத மிகப்பெரிய புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது, ஒலிம்பிக் தரத்தில் புதிய மைதானம் கட்ட இடம் வழங்கப்பட்டுள்ளது, 600 கோடி ரூபாய் செலவில் புதிய ஐடி பார்க் திருச்சியில் அமைய உள்ளது. எனவே நீங்கள் எல்லாரும் தைரியமாக படித்து வரும்போது உங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் அடிப்படை வேலைகளை திருச்சியில் நாங்கள் செய்து வருவதாக அவர் தெரிவித்தார்..இந்த விழாவில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..