தமிழகத்தில் 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி மாநகராட்சியின் எல்லைக்கு அருகே உள்ள 22 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதனால் பல்வேறு கிராம மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் ஒன்று சேர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து மனு அளிப்பதற்காக புறப்பட்டனர் இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கிராம மக்களை தடுத்து நிறுத்தியதால் கிராம மக்கள் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்த தகவல் அறிந்து வந்த ஸ்ரீரங்கம் டிஆர்ஓ சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து கிராம மக்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டனர்.
மேலும் இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தாயனூர் ஊராட்சி மற்றும் புங்கனூர் ஊராட்சியில் உள்ள 350 ஏக்கர் பாசன குளம் மூலமாக வரும் நீரானது 1500 ஏக்கருக்கு மேற்பட்ட நஞ்சை மற்றும் புஞ்சை விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வருகிறோம் மேலும் இங்கு 90 சதவீதத்திற்கு மேல் விவசாயம் செய்யும் தொழிலை நம்பி தங்களின் வாழ்வாதாரத்தை வாழ்ந்து வருகின்றனர். எனவே தமிழக அரசு புங்கனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும் இது குறித்து பலமுறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் புங்கனூர் கிராம மக்கள் ஒன்று திரண்டு எங்களின் எதிர்ப்பை காட்டும் விதமாக ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.