திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சத்துணவு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான சிறு தானிய உணவு விழிப்புணர்வு திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த சிறுதானிய உணவு திருவிழாவில் சிறுதானியங்களைக் கொண்டு கம்பு அடை, கம்பு கொழுக்கட்டை, கம்பு பணியாரம், குதிரைவாலி அரிசி பிரியாணி, கேழ்வரகு அடை, கேழ்வரகு உப்புமா, சாமை புளி பொங்கல், சிறு தானிய புட்டு மிக்ஸ், சோளா டோக்ளா, சோள பணியாரம், தினை கொழுக்கட்டை, ராகி சேமியா, ராகி கொள்ளு, மற்றும் இனிப்பு வகைகளான லட்டு அல்வா கேசரி போன்ற வகைகள் மற்றும் முறுக்கு அதிரசம் அடை உள்ளிட்ட சிறு தானியங்களைக் கொண்டு இனிப்பு மற்றும் கார வகைகள் இந்த கண்காட்சியில இடம் பெற்றது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் 8,9 மற்றும் 10 ஆம் வகுப்பு வரை உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களிடையே நடந்த சிறுதானியங்கள் குறித்து வினாடி வினா போட்டியில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோருக்கு மாவட்ட அளவில் சிறுதானிய சமையல் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த சத்துணவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் பரிசுகள் வழங்கினார். மேலும், சிறுதானியங்களின் அவசியம் குறித்தான புகைப்படங்கள். பேனர்கள், உணவு வகைகள், மூலப்பொருட்கள் ஆகியவற்றை பொதுமக்கள் காணும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள் பிரதான நுழைவு பகுதியில் சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அதியமான் கவியரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரேவதி, சத்துணவு திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.