உங்கள் துறையில் முதல்வர்” என்ற பெயரில் குறைதீர்க்கும் கூட்டம் திருச்சி மாவட்ட காவல்துறை எஸ்.பி. மூர்த்தி தலைமையில் சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த குறைதீர் கூட்டத்தில் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தங்களின் பணியிடமாற்றம், சம்பள குளறுபடி, தண்டனை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை எஸ்பி மூர்த்தியிடம் இன்று அளித்தனர்.
இந்த குறைதீர் கூட்டத்தில் 40 பெண் காவலர்கள் உட்பட 135 பேர் மனு அளித்தனர். பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு எஸ்பி மூர்த்தி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு எஸ்.பி.மூர்த்தி பேட்டி அளிக்கையில்…
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் குற்றங்களை தடுப்பதற்கும், ரவுடிகளை கண்காணிப்பதற்கு சப்-டிவிஷன் என்ற 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் அரிவாள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் 36 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அரிவாள் வாங்க வருபவர்களிடம் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆதாரங்கள் பட்டறை உரிமையாளர்கள் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விவரங்கள் உடனுக்குடன் காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.