திருச்சி பொன்மலை மண்டலம் 3 கோட்டத்திற்கு உட்பட்ட 46வது வார்டு பகுதியில் உள்ள அம்பாள் நகர் பகுதி தெருக்களில் தற்போது தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த தார் சாலை அமைப்பதற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அம்பாள் நகர் தெருக்களில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு நீண்ட நாட்களாக பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக அம்பாள் நகர் முதல் தெருவில் தார் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு ரோடு ரோலர் மூலம் சமன் செய்யப்பட்டது. மேலும் சமன் செய்யப்பட்ட சாலை மீது தார் ஊற்றப்பட்டு அதன் மீது தாருடன் ஜல்லிக்கற்கள் கலந்த கலவையை கொட்டுவதற்காக வந்த லாரி திடீரென சரியாக சமன் செய்யப்படாத நிலையிலிருந்து சாலையில் லாரியின் இரு சக்கரங்களும் சிக்கிக் கொண்டது. தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திருச்சி மாநகரில் முறையாக தார் சாலைகள் போடப்பட்டு வருவதாக தெரிவித்திருந்த நிலையில் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இப்படி சரியாக சமன் செய்யப்படாத சாலைகளில் கடமைக்கு என்று தார் சாலைகள் அமைக்கப்பட்டு வருவது வேதனையிலும் வேதனையாக உள்ளது என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.