திருச்சி ராம்ஜி நகர் அருகே கே.கள்ளிக்குடி NR IAS அகாடமியில் 48வது வெற்றி விழா நடைபெற்றது. விழாவுக்கு அகாடமி இயக்குனர் விஜயாலயன் தலைமை தாங்கி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் படிக்க உறுதுணையாக இருந்த பெற்றோர்களை பாராட்டினார். மேலும் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களிடம் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்க மாட்டோம் என உறுதிமொழி பெற்றுக்கொண்டார்.

விழாவில் வீட்டு வசதி வாரியத்தில் இளநிலை உதவியாளராக குரூப் 4 தேர்வு மூலமாக பணியில் சேர்ந்த திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விஜய் மனைவி சுதா மற்றும் அவரது குடும்பத்தினரை அகாடமி இயக்குனர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். விழாவில் சுதாவின் கணவர் விஜய் பேசும்போது…. எங்களது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை. நாங்கள் 2 பேரும் எம் எஸ் சி பி எட் பட்டம் முடித்துள்ளோம். பின்னர் கடந்த ரெண்டரை ஆண்டுகளுக்கு முன்பு NR IAS அகாடமியில் போட்டி தேர்வு பயிற்சிக்கு சேர்ந்தோம். எனது மகன் ஒன்றரை வயது இருக்கும்போது விடுதியில் தங்கிப் படிக்க வந்தோம். எனது தாயார் மகனை பார்த்துக்கொண்டார். கடின உழைப்பினால் இன்றைக்கு எனது மனைவி பணிக்கு சேர்ந்துள்ளார். நானும் குரூப் 4 பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

பணி ஆணைக்காக காத்திருக்கின்றேன். இதற்கிடையே குரூப்-2 மெயின் தேர்வு எழுதியுள்ளேன். எங்களது வெற்றிக்கு எனது தாயார் செய்த தியாகமே பெரிது. விமர்சனங்களை கண்டு பயப்படாமல் நம் இலக்கை நோக்கி சென்றால் வெற்றி நிச்சயம் என்றார். விஜய்யின் தாயார் பேசும்போது.. மருமகளை மகளாக நினைத்து படிக்க வைத்தேன். அவரும் எங்கள் குடும்பத்துக்கு அந்தஸ்தை பெற்றுத் தந்துள்ளார் என கண்ணீர் மல்க கூறினார். இதேபோன்று வெற்றியாளர்கள் பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக வெற்றியாளர்கள் மற்றும் குடும்பத்தினரை மேல தானங்கள் முழங்க விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *