திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு தான் சொந்தம் என வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாஜக முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அவர்கள் வீட்டு காவலில் வைத்துள்ளனர். இந்நிலையில் திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள தமிழக பாஜக இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன், இன்று திருப்பரங்குன்றம் செல்ல இருந்த போது, அவரை தடுத்து நிறுத்திய போலீஸார் அவரை வீட்டு காவலில் வைத்துள்ளனர். மேலும் அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அவர் வெளியே எங்கும் செல்லக்கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் பாஜக மாநில இளைஞரணி பொது செயலாளர் கௌதம் நாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்… நாங்கள் குடும்பத்துடன் திருமண நிகழ்வுக்கு சென்ற போது காவல்துறையினர் பின் தொடர்ந்து வந்து கைது செய்வதாக கூறினர். நாங்கள் வீட்டிற்கு செல்கிறோம் என கூறிய பின்னர் வீட்டிற்கு செல்லுங்கள், ஆனால் வெளியே எங்கும் செல்லக்கூடாது, தற்போது வீட்டு காவலில் உங்களை வைத்துள்ளோம் என கூறினர். திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள கூடாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அது முழுக்க முழுக்க இந்துக்களுக்கு சொந்தமான இடம். அங்கு ஆடு வெட்டுவது, போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என திருப்பரங்குன்றம் செல்ல இருந்தோம். இந்த அரசாங்கம் மனசாட்சி இல்லாத அரசாங்கமாக உள்ளது. இது சுதந்திர நாடா இல்லை பாகிஸ்தானா என தெரியவில்லை. மதுரைக்கு எதற்காக 144 தடை உத்தரவு என தெரியவில்லை. தேர்தலை விட மோசமாக உள்ளது. இந்துக்களுக்கு சுதந்திரம் இல்லாத அரசாக திமுக அரசு உள்ளது. இன்று இல்லை, நாளை இல்லை என்றாலும் கண்டிப்பாக ஒரு நாள் சூரசம்காரம் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.