திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில்:- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாத மாதம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அதிகாரிகள் சிலர் கலந்து கொள்ளாததால் திருச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு கோட்டாட்சியர் தலைமையில் மாதத்திற்கு ஒரு நாள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இன்று கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் திருவெறும்பூர் தாசில்தார் பங்கேற்கவில்லை அவர் விவசாயிகளுக்கு முறையான அடிப்படை வசதிகளோ அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது கிடையாது. இதனால் இன்று திருவெறும்பூர் தாசில்தாரை முற்றுகை இடுவதென விவசாயிகள் நாங்கள் இன்று வந்தோம். தற்போது அவர் இந்த கூட்டத்திற்கு வரவில்லை. இதே நிலை தொடர்ந்தால் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள் என தெரிவித்தார். மேலும் உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஏரி குளங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றி பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் ஆனால் தற்போது வரை திருச்சி மாவட்டத்தில் ஏரி குளங்களில் உள்ள கருவேலம் மரங்கள் அகற்றப்படவும் இல்லை ஏரி குளங்கள் வெட்டப்படவும் இல்லை இதனால் ஏரி குளங்களுக்கு செல்ல வேண்டிய தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என தெரிவித்தார்.