பாண்டிச்சேரியில் அரசு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டரை எதிர்த்தும், கைவிட கோரியும் அங்குள்ள மின் வாரிய ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி தென்னூர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருச்சி மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் ஐக்கிய சங்க மண்டல செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். டிஎன்இபி எம்பிளாய் பெடரேஷன் மாநில செயலாளர் சிவசெல்வம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் வட்ட தலைவர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐக்கிய சங்க மாநில தலைவர் கண்ணன் கண்டன உரையாற்றினார். பொறியியலாளர் கழகம், பொறியாளர் சங்கம், ஒர்க்ஸ் சம்மேளனம், அண்ணா தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் கலந்து கொண்டனர்.