தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் ஒன்றான திருச்சி உறையூரில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. வானமே மேற்கூரையாக கொண்ட அம்மனை வழிபட தமிழகம் முழுவதும் பல்வெறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்துவது வழக்கம். கல்வி, செல்வம், மற்றும் வலிமை இந்த மூன்றினையும் வழங்கி பக்தர்களுக்கு அருள்மழை பெய்து வருபவள் வெக்காளியம்மன்.
இவ்வால்யத்தில் ஆண்டுதோறும் தைப்பூசம் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும், அதன்படி தைப்பூச விழா கடந்த 28ஆம் தேதி அன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கி தினசரி வெக்காளியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள்பிரகாரங்களை வலம் வந்தார்.
இன்று வெக்காளியம்மன் ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சிறிய ரதத்தில் வெக்காளியம்மன் எழுந்தருள, தீபாராதனைக்கு பிறகு ஏராளமான பக்தர்கள் ரதத்தை திருக்கோவிலைச் சுற்றிலும் வீதிகளில் இழுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.