தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் திருச்சி மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை (தொமுச) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே தொமுச தலைவர் குணசேகரன் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் நலச்சட்டங்களை நீக்கிவிட்டு அவற்றுக்கு பதிலாக புதிதாக 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தொழிலாளர் விரோத, முதலாளிகளுக்கு ஆதரவான இந்த சட்டங்களை தன்னிச்சையாக நடைமுறைப் படுத்தியிருப்பதற்கு தொமுச சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளும் நவ. 21 முதல் அமல்படுத்தப்படும் என தன்னிச்சையான அறிவிக்கை வெளியிட்டிருப்பது, அனைத்து ஜனநாயக நெறிமுறைகளையும் மீறும் செயல். இது தொழிலாளர் நலன்களை முற்றிலும் சிதைத்துள்ளது. உழைக்கும் வர்க்கத்தினரின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானவை. இந்தச் சட்டத்தொகுப்புகளை தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களுக்கு எதிரான இனரீதியிலான தாக்குதலாகக் கருதுகிறோம். 4 தொழிலாளர் சட்டங்களை இயற்றும்போது தொடக்க நிலையிலேயே தொழிற்சங்கங்களும், தொழிலாளர் நல கூட்டமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.பிகார் சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் ஒன்றிய அரசு திடீரென அமல்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்பை திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
