திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள சரடமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (38). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். ராமச்சந்திரன் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் உணவருந்தி விட்டு வீட்டை சாத்திவிட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் சுகன்யா கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச் செயினை பறித்து சென்றனர்.
செயின் பறிப்பதை உணர்ந்த சுகன்யா திடுக்கிட்டு எழுந்த போது அவரது கழுத்தில் கையை வைத்து அழுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம ஆசாமிகள் செயினை பறித்துச் சென்றனர். இதில் சுகன்யாவின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. இவரின் வீடு கிராமத்துக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் இருந்ததால் இது மர்ம ஆசாமிகளுக்கு சாதகமாக அமைந்தது. காட்டுப் பகுதியாக வந்த மர்ம ஆசாமிகள் நகையைப் பறித்துச் விட்டு காட்டுப் பகுதியாக தப்பிச் சென்றனர்.
இது குறித்து அவசர காவல் உதவி எண் 100 மூலம் ராமச்சந்திரன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.தகவலறிந்து நள்ளிரவில் சம்பவ இடத்திற்க்கு வந்த காணக்கிளியநல்லூர் காவல் ஆய்வாளர் விஜய் கோல்டன் சிங் உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் நிலா வரவழைக்கப்பட்டது.வீட்டின் அருகில் மர்ம ஆசாமிகள் விட்டுச் சென்ற ஒரு செருப்பை மோப்பம் பிடித்த நிலா வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் மோப்பம் பிடித்து ஓடிச் சென்று நின்று விட்டது.இச்சம்பவம் குறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் காணக்கிளியநல்லூர் போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.