தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மகன் கவின். சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த நிலையில், கடந்த 27-ந் தேதி நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் குற்றவாளியான சுர்ஜித்தைக் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் சுர்ஜித்தின் அக்காவான சுபாஷினி என்பவரை வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் காதலித்து வந்ததால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதற்கிடையே இந்தக் கொலை சம்பவத்திற்கு சுர்ஜித்தின் பெற்றோரும் உடந்தை என்றும் அவர்களையும் கைது செய்தால் தான் கவின் உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி கவினின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்தனர். இருப்பினும், அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்ததால் இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள அரசு சட்டக் கல்லூரி முன்பாக சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆணவ கொலை செய்த குற்றவாளியான சுர்ஜித்தின் தாய் தந்தையான காவல்துறையில் பணிபுரியும் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு சட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஆணவ கொலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.