தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மகன் கவின். சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த நிலையில், கடந்த 27-ந் தேதி நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞரால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் குற்றவாளியான சுர்ஜித்தைக் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் சுர்ஜித்தின் அக்காவான சுபாஷினி என்பவரை வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் காதலித்து வந்ததால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து நெல்லை இளைஞர் கவின் படுகொலையை கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் கூட்டமைப்புகளுடன் இணைந்து திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழக அரசு ஆவண படுகொலைக்கு உடனடியாக சிறப்பு சட்டம் இயற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். ம.க.இ.க மையக் கலைக்குழு பொறுப்பாளர் லதா, பு.ஜ.தொ.மு மாவட்டச் இணைச் செயலாளர் மணலிதாஸ், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் செழியன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ஆதி, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் மற்றும் ஜனநாயக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்