திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேசியக்கொடி கம்பத்தின் கீழ் வயதான மூதாட்டி மற்றும் அவரது மகன் ஆகியோர் தரையில் படுத்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் . இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் அழைத்துச் சென்றனர்.
இது குறித்து மூதாட்டி தனபாக்கியம் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். தற்போது விவசாய கூலி வேலை செய்து மகன் மருமகள் பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறேன் நான் பட்டியல் இனத்தை சார்ந்தவள் என்பதால் என்னை சாதி ரீதியாக பெரும் தொல்லை கொடுத்து வரும் உத்தமர் சீலி பஞ்சாயத்து கிளர்க் ராஜகோபால் எனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பை கொடுக்க மறுத்து வருகிறார் மேலும் எனது தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை வாங்கி வைத்துக்கொண்டு இரண்டு ஆண்டுகளாய் கொடுக்க மறுத்து வருகிறார் இதனால் நான் ஆண்டு வருமானம் இன்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறேன்.
இது குறித்து பலமுறை அவரிடம் சென்று எனது வங்கிப் புத்தகம் மற்றும் வேலை செய்யும் அடையாள அட்டையை திரும்ப கொடுங்கள் என்று கேட்டதற்கு எனது சாதியை குறித்து மிகவும் கேவலமாகவும் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் வார்த்தைகளை பேசி வருகிறார் இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன் எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தமர் சீலி பஞ்சாயத்து கிளர்க் ராஜகோபால் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரியும் எனது வாங்கிப் புத்தகம் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட அடையாள அட்டையை வாங்கித் தரக் கோரியும் மேலும் இரண்டு ஆண்டுகளாய் தராமல் இருக்கும் எனது சம்பளத்தை தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.