திருச்சி மாநகரம், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமைகாவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் என்பவர் கடந்த 30-ம் தேதி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தின் முகப்பில் இரவு போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, கடந்த 01.08.2023 ந்தேதியன்று இரவு உயிரிழந்தார். இது சம்மந்தமாக திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து. காரை ஒட்டி வந்த நபர் மணிவேல் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் விபத்தில் இறந்து போன தலைமைகாவலர் ஸ்ரீதர் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைக் காவலர் ஸ்ரீதரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து அவரது குடும்பத்தினருக்கு ரூ.25,00,000/- (ரூபாய் இருபத்தைந்து இலட்சம்) நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி டெல்டா மாவட்டங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மீண்டும் சென்னைக்கு செல்ல திருச்சி விமான நிலையம் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்து போன தலைமை காவலர் ஸ்ரீதர் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி ரூபாய். 25,00,000/-கான (ரூபாய் இருபத்தைந்து இலட்சம்) காசோலையை வழங்கினார்கள். இந்நிகழ்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஆகியோர் உடனிருந்தனர்.