பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று பெரம்பலூர் கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் அய்யர்மலை, குட்டப்பட்டி நான்கு ரோடு, குளித்தலை நகர் பகுதி, மருதூர் பேரூராட்சி பகுதி, பணிக்கம்பட்டி, நங்கவரம் பேரூராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் வேட்பாளர் பாரிவேந்தர் பேசுகையில்… வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
ஏனென்றால் இன்று பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டு விட்டது. விலைவாசி உயர்ந்து விட்டது. இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாடு அரசுதான். ஆனால் இவர்கள் சொல்வார்கள் இதற்கு காரணம் மோடி அரசு என்று. மோடி தலைமையிலான ஆட்சி ஊழலற்ற ஆட்சி. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 12000 வழங்குகிற ஆட்சி மோடி ஆட்சி. விவசாயிகளுக்கு வழங்கப்படுகிற உரம் அதிக விலைக்கு வாங்கி அவற்றை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு தருகிற அரசு மோடி அரசு தானே தவிர தமிழ்நாடு அரசு அல்ல. எனவே மத்தியில் ஊழலற்ற ஆட்சி மீண்டும் அமைய தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.