தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் உள்ள டைமன் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த ஆயத்த மாநாட்டில் குழு தலைவர் மோகன் வரவேற்புரை ஆற்றிட மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். முன்னதாக மறைந்த நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாநில தலைவர் தமிழ்ச்செல்வி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய கோரியும் கிராம உதவியாளர் சத்துணவு அங்கன்வாடி உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுவோரை நிரந்தர கால முறை ஊதியம் வழங்க கோருவது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 5ஆம் தேதி சென்னையில் லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி நடத்துவது எனவும், கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.