திருச்சி பீமா நகர் பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்கள் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி பீமநகர் பகுதியில் தற்போது மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ராஜராஜேஸ்வரி உள்ளார். இந்தப் பள்ளியில் மொத்தம் 27 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்த மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தற்போது 981 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இவர்களுக்கு இந்தப் பள்ளியில் 12 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு என நான்கு கழிவறைகள் மட்டுமே உள்ளதால் போதிய இட வசதியின்றி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இந்த மாநகராட்சி பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் அளவிற்கு இந்த பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. மேலும் கடந்த ஆண்டு பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு வந்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
எனவே புதிதாக கட்டப்படும் வகுப்பறைகள் விளையாட்டு மைதானத்துடன் கஸ்தூரி மஹால் பகுதி அல்லது யூனியன் கிளப் பகுதி அல்லது இந்த பள்ளிக்கு எதிர்ப்புறம் உள்ள மாநகராட்சி இடங்களை வழங்கி அங்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கான உள்விளையாட்டு அரங்கம் அமைத்து எங்கள் பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த ஆவணம் செய்து உதவுமாறு கோரி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.