திருச்சி மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 60வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய் பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது வார்டில் எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து நான் பலமுறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டும் கூறியும் செவி சாய்க்கப்படவில்லை. இதனால் எனது வார்டு மக்களுக்கு பதில் கூற முடியாமல் தவிக்கிறேன். ஆகையால் 25 ஆண்டு காலமாக மாமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்றிய கொடுத்த மக்களுக்கும், அமைச்சர் நேருவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு நான் எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கண்ணீர் மல்க பேசினார். இதைத்தொடர்ந்து மேயர் மற்றும் ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் சமர்ப்பித்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுக உள்ளிட்ட பல கட்சி மாமன்ற உறுப்பினர்கள் முயற்சித்தனர். ஆனால் என்னை தடுத்தீர்கள் என்றால் காரில் பெட்ரோல் வைத்திருக்கிறேன் இங்கேயே தீக்குளித்து விடுவேன் என்று ஆவேசமாக கூறினார். இதைத் தொடர்ந்து இதர கவுன்சிலர்களின் சமாதானத்தையும் ஏற்காத காஜாமலை விஜய் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறி தனது காரில் புறப்பட்டு சென்றார்.
அங்கிருந்து புறப்பட்டு சென்ற காஜமலை விஜய் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து திடீரென பெட்ரோலை தனது தலையில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார். அப்பொழுது அங்கு இருந்த காவல்துறையினரும் கட்சியினரும் அவரை தடுத்து நிறுத்தினர். கவுன்சிலர் காஜாமலை விஜி மாநகராட்சி அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற போது அதனை ஒளிப்பதிவு செய்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை காஜாமலை விஜயின் கார் ஓட்டுநர் மற்றும் மாமன்ற உறுப்பினர் 45 வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் ஆகியோர் அவரது செல்போனை பறித்து தாக்கினார். இதை கண்ட சக பத்திரிக்கையாளர்கள் திமுக கவுன்சிலர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது மாநகராட்சி மேயர் அன்பழகன் பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தி கவுன்சிலர் காஜாமலை விஜய்க்காக பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரினார்.
வீடியோ எடுத்த பத்திரிக்கையாளரின் செல்போனை பறித்து தாக்கிய திமுக கவுன்சிலர் காஜாமலை விஜயின் டிரைவர்:-
கடந்த மாதம் இதே போன்ற தமிழகத்தில் ஒளிப்பதிவாளர் ஒருவர் செய்தி வெளியிட்டதற்காக ரவுடிகள் மூலம் ஓட ஓட விரட்டி வெட்டுப்பட்டார். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் மற்றும் திமுக கவுன்சிலரின் ஆதரவாளர்களால் கடுமையாக பத்திரிக்கையாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பல்வேறு பத்திரிக்கை சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் தமிழக திமுக அரசுக்கு எதிராக தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.