தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்காக பல்வேறு கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான அருண் நேரு திமுக சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று திருச்சி மாவட்டம் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூனாம்பாளையத்தில் திமுக வேட்பாளர் அருண்நேரு, அமைச்சர் கே.என் நேரு, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பேசும்போது….
மண்ணச்சநல்லூர் பெரிய நகரமாக உருவாகி வருகிறது. நகரமாக உருவாகும் போது வேலைவாய்ப்பு பெருகும். மண்ணச்சநல்லூர் சமயபுரத்தையும் மாநகராட்சியில் இணைத்து புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். பேரூராட்சியின் பதவி காலம் முடியும் போது மாநகராட்சியாக மாறும். மாநகராட்சியாக ஆகும்போது பூலாம்பாளையம் கிராமத்தில் வேலை வாய்ப்புகள் உருவாகும். தளபதி ஸ்டாலின் அறிவித்த அருண் நேரு வேட்பாளரை தளபதியே நிற்கிறார் என நினைத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். நீங்கள் அழைக்கும் போதெல்லாம் வந்து பணியாற்றக் கூடிய ஒரு வேட்பாளர் இவர். 40 ஆண்டு காலம் நான் உங்களுக்காக பணியாற்றி வருகிறேன். உங்கள் பேராதரவை உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். இந்த பிரச்சாரத்தின் போது 500க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள், கூட்டணி கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.