பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் நேற்று மாலை முதல் இரவு வரை பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்கள் தோறும், திறந்த வேனில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடையே தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் தேனூரில் பொதுமக்களிடையே வேட்பாளர் பாரிவேந்தர் பேசுகையில்… நான் எம்.பி.யாக செய்த பணிகள் குறித்த தகவலை உங்களுக்கு புத்தகமாக வழங்கி உள்ளேன். இது போன்ற புத்தகம் போடுவதற்கு நம்பிக்கை, வெளிப்படை தன்மை, துணிவு வேண்டும். நான் உங்களுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளேன். எனது எம்.பி. நிதி ரூ.17 கோடியை முழுமையாக செலவு செய்துள்ளேன். மேலும் எனது வாக்குறுதியின்படி 1,200 மாணவர்களை தேர்ந்தெடுத்து /பட்டதாரிகளாக ஆக்கி உள்ளேன். அவர்களின் படிப்பிற்கு ரூ.118 கோடி செலவு ஆகியுள்ளது. அந்த திட்டம் தொடரும். தற்போது மீண்டும் ஒரு வாக்குறுதி தருகிறேன்.
1,500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து இலவச உயர் மருத்துவம் வழங்கப்படும். நீங்கள் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஊழல் கட்சிகளில் இருந்து வருபவர்களை தவிர்க்க வேண்டும். திராவிடக்கட்சிகள் தான் ஊழல்கட்சி. தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் என்று பொய் வாக்குறுதியை தி.மு.க. சொல்லி பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய் சொல்லியே ஆள்கின்றனர் என பேசினார். இந்த பிரசாரத்தில் இந்திய ஜனநாயக கட்சியினர், கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பாரிவேந்தருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் பாரிவேந்தர் கண்ணப்பாடி, டி.களத்தூர், அடைக்கம்பட்டி, நக்கசேலம், சிறுவயலூர், குரூர், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், ஆலத்தூர் கேட், இரூர், திருவளக்குறிச்சி, பாடாலூர் ஆகிய கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார்.