திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரம் மற்றும் சாதாரணக் கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அதிமுக மாமன்ற குழு தலைவர் அம்பிகாபதி பேசுகையில், திருச்சி மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இதன் மூலம் பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலிக்கிறார்கள். அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். வாகன நிறுத்தம், கழிப்பிடம் போல் விளையாட்டு உபகரணங்களுக்கும் மாநகராட்சி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். சேவை மனப்பான்மையுடன் பூங்காக்களை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதாள சாக்கடை திட்ட இணைப்புக்கு 6 மீட்டர் நீளத்திற்கு மேல் இருந்தால் ஒப்பந்ததாரர் கட்டணம் வசூலிக்கிறார். இதை தடுக்க வேண்டும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது என்று கூறினார். அப்போது மேயர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சிக்கு தொடர்பு இல்லாத பொருள் குறித்து இங்கே பேசக்கூடாது என்றனர். எனினும் கவுன்சிலர் அம்பிகாபதி தொடர்ந்து பேசுகையில், கடைகளிடம் நாம் வரி வசூல் செய்கிறோம். அதனால் அவர்கள் என்ன விற்பனை செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை கடைகளில் விற்பனை செய்வதை தடுக்க நமது மாநகராட்சியிலும் சுகாதாரத்துறை உள்ளது. ஆகவே அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.
எனினும் திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டு கொண்டு கவுன்சிலர் அம்பிகாவதியை பேச அனுமதிக்க வில்லை. இதைத் தொடர்ந்து இருக்கையில் இருந்து எழுந்த அம்பிகாபதி மேயர் அன்பழகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து போதை பொருள் ஒழிக்க தவறியதை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி வெளியேறினார். இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன் , துர்கா தேவி, ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், செயற்பொறியாளர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.