திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி மற்றும் வெங்கடாசலபுரம், வெள்ளனூர், புங்கை சங்கேந்தி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அம்மன் சோனா, தனுஷ்டா, அமோக் உள்ளிட்ட நெல் ரகங்கள் நடப்பட்டதாகவும், நடவுசெய்த 20நாட்களிலேயே முழுமையாக வளர்ச்சி பெறாமல், சிறிய கருதுளாக வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசால் அங்கீகரிக்கப்பட்ட விதை விற்பனைமையங்களில் வாங்கிய நெல்லைக்கொண்டு பயிரிட்டதுடன், ஏக்கருக்கு முப்பதாயிரம்வரை செலவு செய்துவிட்டு சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு போலி விதைநெல்லை வழங்கி மகசூல் பாதிப்பு மற்றும் நிலத்தை பாதிப்படையச்செய்த போலி விதை நெல்லை விற்பனை செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு பெற்றுத்தரவும் வலியுறுத்தி விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுடன் மாவட்டஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் முறையிட்டனர். திருச்சி மாவட்டத்தில் இதுபோன்று போலியான விதை நெல் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாகவும், வேளாண்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் விவசாயிகளும், விவசாயமும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. எனவே, போலியான விதை நெல்லை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கைஎடுத்து நஷ்டஈடு வழங்கவேண்டும் என கோரிக்கைவிடுத்தனர்