திருச்சி மாவட்டம் மணிகண்டம் அந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் அம்மன் பொன்னி ரகம் என்று பொய்யாக கூறி மாற்று போலியான விதையை விவசாயிகளுக்கு தனியார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 120 நாள் கதிர் விட வேண்டிய நெற்பயிர் ஆனது நாற்று பிடுங்கி நட்ட 10 நாளில் கதிர் விட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
எனவே அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கையும் அதனை விற்பனை செய்த வியாபாரிகளை கைதும் செய்ய வேண்டும். மேலும் இழப்பீடாக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் அந்நிறுவனத் திடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையில் நெற்கதிருடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி, உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.