ஒன்றிய அரசு கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் (பென்ஷன் விதிகள் திருத்த) நிதி மசோதாவை நிறைவேற்றியுள்ள நிலையில் இம்மசோதாவில் உள்ள சரிபார்த்தல் விதி 145 படி அரசாங்கம் ஓய்வூதியதாரர்களை அவர்கள் ஓய்வு பெற்ற தேதியின் அடிப்படையில் வேறுபடுத்தி, அதன் அடிப்படையில் ஊதிய கமிஷன் பரிந்துரை பலன்களை அமல்படுத்த அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்துள்ளதாகவும்,
இந்த திருத்தம் மிக பாரபட்சமானதும், ஓய்வூதியதாரர்களை வஞ்சிப்பதாக உள்ளதாக கூறி ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள நிதி மசோதாவை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தேசிய ஒருங்கிணைந்த ஓய்வூதியர் சங்கத்தினர் (NCCPA) பிஎஸ்என்எல், ரயில்வே, அஞ்சல் துறை உள்ளிட்ட ஒன்றிய நிறுவனங்களை சார்ந்த ஓய்வூதியர்கள் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ரங்கராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல்வேறு தொழிற்சங்களை சேர்ந்த நிர்வாகிகள் ராகவேந்திரன், அஸ்லாம்பாஷா, ரவீந்திரன்,மகேந்திரன், கோபால்சாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.