மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விவசாய சங்கங்கள், விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இணைந்து நடத்திய அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இன்று நடைபெற்றது.
இந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் பாண்டியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின், மாவட்டத் தலைவர்கள் தங்கதுரை, மோகன், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் கலந்துகொண்டு போராட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக:- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், தொழிலாளர் உரிமையை பறிக்கும் 4 சட்ட தொகுப்புகளை திரும்பபெறக் கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், காண்ட்ராக்ட் ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறையை ஒழித்திடக் கோரியும், மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கிட கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே ஜங்ஷனின் நுழைவு வாயிலில் இருந்து பேரணியாக வந்து போலீசாரின் தடுப்பையும் மீறி திடீர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ததால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.