வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும். எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும், பேரிடர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் உரிய இழப்பீடு கிடைக்கச்செய்யும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்திலும், காப்பீடு கொள்கையிலும் மாற்றம் கொண்டு வரவேண்டும். பருவ கால மாற்றத்தால் ஏற்படும் பேரழிவு பெருமழை மற்றும் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகிறார்.

அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதும் குடியரசு தினமான இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் நடைபெறும் டிராக்டர் பேரணியின் ஒரு பகுதியாக திருச்சியிலும் இன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி நெம்பர் ஒன் டோல்கெட்டிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை டிராக்டர் பேரணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டிராக்டர் பேரணி நெம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் தொடங்கியது.

20 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் அந்த பேரணியில் பங்கேற்றது. பேரணி தொடங்கிய சிறிது தூரத்திலேயே போலீசார் டிராக்டர்களை தடுத்து நிறுத்தினர். அதன் காரணமாக அந்த பேரணியில் ஈடுபட்டவர்கள் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால் முசிறி துறையூர் நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையில்இடையூர் ஏற்பட்டதால் பைபாஸ் வழியாக போலீசார் வாகனங்களை திருப்பி விட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யா கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்திலும் ஈடுபடுவோம் டெல்லி சென்றும் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *