திரைத்துறையில் தண்ணிகர் இல்லாத தனது நடிப்பினாலும் – எதார்த்தம் நிறைந்த தனது பேச்சினாலும் எத்தனையோ லட்சக்கணக்கான உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகர் விஜயகாந்த் இன்று இல்லை என்பதை அவரது ரசிகர்களால் எந்த வகையிலும் தாங்கி கொள்ள முடியவில்லை. அசாத்தியாமான நடிப்பு – வாஞ்சையான பண்பு …இடிமுழக்கம் போல அரசியல் பேச்சு என தமிழக மக்கள் மனதில் தனக்கென ஒரு கோட்டையை நடிகர் விஜயகாந்த் உருவாக்கி வைத்திருக்கிறார் என்றால் அதில் மாற்று கருத்துகள் இல்லை.
எம்ஜிஆர் உயிரிழந்த போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பட்டித்தொட்டிகளில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பாடை கட்டி அதில் உயிரிழந்தது போல் பொம்பையை வைத்து ஒப்பாரி வைத்து அழுதனர். அதே போல் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட நொச்சியம் அருகே உள்ள குமரக்குடி கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி விஜயகாந்தின் உருவ பொம்மையை பாடையில் வைத்து ஊர் சுற்றி வந்தனர் – மேலும் தங்களது ஆதங்கத்தை கண்ணீராக வெளிப்படுத்தி ஒப்பாரி வைத்து அழுத காட்சிகள் மனதை சற்றே கலங்க வைக்கிறது.
தேமுதிக முன்னாள் மாவட்ட பிரதிநிதி சிவாஜி ரமணா – இளைஞர் நற்பணி மன்ற தலைவர் பிரபு ,மணிகண்டன் பூந்தோட்ட காவல்காரன் ரசிகர் நற்பணி மன்ற உறுப்பினர் மகேஷ் ,சிவக்குமார் , ராஜா , வினோத் , கோபி , விஜயக்குமார், ராஜா மாணிக்கம் , பரமசிவம் , கலையரசன் ஆகியோர் ஏற்பாட்டில் இந்த கண்ணீர் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. பிரபு என்பவர் விஜயகாந்த்க்கு மொட்டை அடித்து ஈமச்சடங்கு செய்தார்.