திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்குவதற்கான தகுதி தேர்வு திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த நேர்முகத் தகுதி தேர்வில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு எலும்பு முறிவு மருத்துவர், உடல் தகுதி தேர்வு மருத்துவர் ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் கால்களை இழந்தவராகவும், 75%க்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும், மாற்றுத்திறனாளியான கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், சுய தொழில் செய்யும் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, குறிப்பாக மத்திய, மாநில அரசு துறையில் வேலை பார்க்கும் மாற்றுத்திறனாளிக்களுக்கு இந்த இணைப்பு சக்கர வாகனம் வழங்கப்பட மாட்டாது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வரிடம் அளித்த மனுக்கள், மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுக்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 550 பேருக்கு கடிதம் மூலம் தகுதி தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்திலிருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் இந்த தகுதி தேர்வில் கலந்து கொண்டனர்.