ஸ்ரீரங்கத்தில் மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து மின்ஊழியரை தாக்கியவரை கைது செய்யக்கோரி மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கள் அறிவிப்பு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தளுதாளப்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(59) இவர் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பிரிவு உதவி மின்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 3-ந்தேதி மின்வாரிய அலுவலகத்தில் பணியில் இருந்த போது அங்கு வந்த விவேக் என்பவர் எங்கள் வீட்டில் எப்படி நீ மின் துண்டிப்பு செய்யலாம் என கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி அவரது கன்னத்தில் அறைந்துள்ளார். இதுகுறித்து கணேசன் ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். ஆனால் இதுநாள் வரை ஸ்ரீரங்கம் போலீசார் விவேக்கை கைது செய்யாததை கண்டித்தும் விவேக்கை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு மின்வாரிய ஸ்ரீரங்கம் கோட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஸ்ரீரங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க ஆலயமணி, லக்கன், இன்ஜீனியர் சங்க கமலநாதன், ஐஎன்டியுசி பிச்சை, அண்ணா தொழிற்சங்க ராஜா, ஓய்வூதியர் சங்க பன்னீர்செல்வம், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு பழனியாண்டி, தர்மலிங்கம், சிஐடியு ஸ்ரீரங்கம் பகுதி ஒருங்கிணைப்பாளர் ரகுபதி, சிபிஎம் பகுதிசெயலாளர் தர்மா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் மின்ஊழியரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த 2500 பேர் பங்கேற்கும் காத்திருப்பு போராட்டம் விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.