பொங்கல் திருநாளின் 3-வது நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது கன்னிப்பொங்கல் என்றும், கணுப்பண்டிகை என்றும் அழைக்கப்படும். இந்நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசிபெறுதல் போன்ற கலாசாரங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. காணும் பொங்கலையொட்டி மக்கள் சுற்றுலாத் தலங்களுக்கு, தங்கள் குடும்பத்தினருடன் சென்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி காணும் பொங்கலான இன்று காலையிலேயே திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்திற்கு மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து, குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடியும், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களில் பொழுதைக்கழித்தும் காணும் பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கிராமப்புறங்களில் உறவினர்களுடன் ஒன்றுகூடி, உணவு சமைத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து பரிமாறி உண்டு மகிழ்ந்து வருகின்றனர். நகர்ப்புறங்களில் கலாசார மாற்றத்தினையடுத்து, இதுபோன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று குடும்பத்தினர், உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்கின்றனர். சுற்றுலாவிற்கு வந்தவர்கள் முக்கொம்பு அணையில் பிடிக்கப்பட்ட மீன்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். பலர் குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் குடும்பத்துடன் நீராடி மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுவதால் முக்கொம்பில் காவலர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *