திருச்சி, சங்கிலியாண்டபுரம் கோனார் தெருவைச் சேர்ந்தவர் புகழேந்தி மகள் ராஜேஸ்வரி. இவர் கடந்த கல்வியாண்டில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்ட வகுப்பு சேர்ந்துள்ளார். ஆனால் அதன் பின்னர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் அவர் விரும்பிய பி.டெக் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர் அங்கு சென்று சேர்ந்தார். ஆனால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செலுத்திய கல்லூரிக் கல்விக் கட்டணத் தொகை திருப்பி அவருக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டும் உடன் கட்டணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுபோல பாரதிதாசன் பல்கலைக்கழகம் மட்டுமின்றி பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலிருந்தும், வேறு கல்லூரிகளில் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்விக்கட்டணங்கள் திருப்பி வழங்கப்படாமல் இருந்து தெரியவந்தது.
இது குறித்து ராஜேஸ்வரியின் தந்தை புகழேந்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சி வந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் முறையிட்டு, கல்விக்கட்டணத்தை திருப்பி வழங்க கோரிக்கை விடுத்து மனுவையும் அளித்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறிச்சென்றார். அதுபோலவே, முதலமைச்சரிடம் மனு அளித்த 10 நாட்களில் ராஜேஸ்வரி மட்டுமின்றி, அவரைப் போல் கல்லூரி மாறிய பிற மாணவ, மாணவியருக்கும் (சுமார் 15 பேர்) அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. இந்நிலையில், தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் செவ்வாய்க்கிழமை காலை திருச்சி வந்த தமிழக முதல்வரிடம், விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட போது, மாணவி ராஜேúஸவரி, கல்விக்கட்டணம் திருப்ப கிடைக்க நடவடிக்கை எடுத்தமைக்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றைக் கொடுத்தார்.
அதனை காரில் இருந்தப்படி முதலமைச்சர் பெற்று கொண்டு புறப்பட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் ராஜேஸ்வரியின் செல்லிடப்பேசிக்கு வந்த அழைப்பில், தமிழக முதல்வர் பேசியுள்ளார். மாணவியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து நன்றா படிக்க வேண்டுமென அறிவுரை கூறிச்சென்றுள்ளார். இது குறித்து, மாணவி கூறுகையில், மாணவ, மாணவியரின் பொதுப்பிரச்னை தொடர்பாக அளித்த மனுவுக்கு முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்ததுடன், செல்லிடப்பேசியிலும் பேசி வாழ்த்திது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.