போட்டித் தேர்வு எழுதுவோர் கூட்டு கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்ற 12.10.2025-ந் தேதி முதுகலை ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளது. திமுக அரசு ஆட்சிபொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான புதிய பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப் பட்டுள்ளது. மேலும் பொது அறிவு, உளவியல் போன்றவைகளுக்கு மிக ஆழமாகவும் பரந்து விரிந்த பாடத்திட்டம் தரப்பட்டுள்ளது. அதே வேளையில் இவற்றை படித்து தேர்வு எழுத போதிய அவகாசம் எங்களுக்கு வழங்கப்படவில்லை.
மிகுந்த மன உளைச்சலில் அச்சத்துடனும் உள்ள நாங்கள் அரசு மற்றும் கல்வி அதிகாரிகளை பல்வேறு வகையில் அணுகிய போதும் எங்களுக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. மேலும் தற்போது சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடர்ந்துள்ளோம். மேலும் எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்று பல்வேறு கட்சி தலைவர்களும் எங்களுக்காக குரல் கொடுத்துள்ளனர். ஆகவே பள்ளிக்கல்வி துறை அமைச்சர், தமிழக முதல்வர் எங்கள் பிரச்சனைமீது தனிகவனம் செலுத்தி தேர்வை எதிர் நோக்கி காத்திருக்கும் 2 லட்சம் ஆசரியர்கள் நலன் கருதி நாங்கள் தேர்வை எழுத 2 மாத கால அவகாசம் வழங்கிட வழிவகை செய்ய வேண்டுகிறோம் என்றார்.