முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 31 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 6 பேரும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
இதில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்த குடிமக்கள் என்பதால், அவர்கள் நேற்று இரவு 11.40 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள இலங்கை தமிழர் சிறப்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டனர்.
மேலும் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்கள், அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல அனுமதிக்கவோ, விரும்பினால் இலங்கையராக பதிவு செய்து கொண்டு தமிழ்நாட்டிலேயே வசிக்க அனுமதிக்கவோ அரசிடம் கோரப்போவதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் முருகன், ஜெயக்குமார் ஆகியோர் இந்திய குடிமக்களை திருமணம் செய்துள்ளதன் அடிப்படையில், அவர்கள் இருவரும் இந்தியாவில் வசிக்க அனுமதி கோரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.