திருச்சி மாநகர ஆர்.சி, சி.எஸ்.ஐ, டி.இ.எல்.சி திருச்சபைகளின் பொதுநிலையினர் பேரவைகள் இணைந்து நடத்திய சமூக அரசியல் ஆய்வரங்கம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…
அதானி என்ற ஒருவரை காப்பாற்றுவதற்காக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் முடக்குகின்ற மிகவும் அற்பமான ஒரு அரசியலை பாஜக செய்து கொண்டிருக்கின்றது. அதானியை விமர்சித்த காரணத்தினால், அதானி மீதான பங்கு சந்தை ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்ததால் ராகுல் காந்தியின் பதவியை பறிக்க, மிகக் கேடான அரசியலை, எதேச்சதிகார அரசியலை பாஜக அரசு செய்து வருகிறது. மோடி என்கிற தனிநபரை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை மோடி சமூகத்திற்கு எதிராக பேசியதாக ஒருவர் தொடுத்த அவதூறு வழக்கில் அரசியல் தலையீடு செய்து இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்க வைத்து அவரை பதவி பறிப்போகும் நிலைக்கு தள்ளி உள்ளனர்.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல் சதி. இது எந்த வகையிலும் ராகுல் காந்தியை பாதிக்காது. ஆனால் ராகுல் காந்தியை தேர்தலிலே நிற்கவிடாமல் தடுத்து எதிரியே இல்லாத தேர்தல் களத்தை சந்திக்கிற, மிகவும் இழிவான ஒரு அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது. இது வன்மையாக கண்டனத்திற்குரியது. விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி சார்பில் இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம் தேதியை பின்னர் அறிவிப்போம், நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே சென்னையில் எனது தலைமையில் மோடி அரசின் இந்த ஜனநாயக விரோத போக்கை, பாசிச போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.