திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி தர்கா வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட அலுவலகம் திறப்பு மற்றும் இஃப்தார் துறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் கலந்துக் கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:- தர்காவில் வரக்கூடிய பக்தர்களுக்கு ஒரு அடிப்படை தேவைகளை செய்து கொடுக்கும்படி வலியுறுத்தி உள்ளேன். இதற்கு சொந்தமான சொத்துக்கள் திருச்சியிலும் திருச்சி சுற்றிலும் ஏராளமாக உள்ளது. இவை ஆக்கிரமிப்பில் உள்ளதாக தகவல் வந்துள்ளது. அவைகளை கண்டறிந்து ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்கக் கூடிய வகையிலும் பொதுமக்களுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ளும் வகையில் அறங்காவலர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் தெரிவித்துள்ளேன். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் மீட்பதற்கான பணிகளை மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்தனர். வக்பு போர்டு தலைமை வாரியத்தில் இருந்து எல்லா வித உதவிகளும் வழங்கப்படும். தமிழக அரசும் எல்லா சொத்துக்களை மீட்டு எடுப்பதற்கும் கவனம் செலுத்தி ஒத்துழைக்கிறது.
முறைகேடு ஈடுபட்டவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தாங்களாகவே பணி ஓய்வு பெற்று செல்வதாக எழுதிக்கொடுத்து சென்றிருக்கிறார்கள். முறைகேடு ஈடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்திருக்கிறோம் அது நடந்தேறியுள்ளது. ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த அனைத்து உலமாக்களின் விண்ணப்பத்தை பரிசீலித்து ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெறும் உலமாக்கள் இறந்த பின்னர் அவர்களது மனைவிமார்களுக்கு அந்த ஓய்வூதியம் கொண்டு செல்ல வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். வக்பு வாரியத்தை பொறுத்தவரையில் வெளிப்படைத் தன்மையும் அரசியல் குறுக்கீடு இல்லாமல் இருக்கிறது என தெரிவித்தார். பேட்டியின்போது அறங்காவலர் குழுவினர் நூரூதீன், சையதுசலாவுதீன், அக்பர் உசைன் ஆகியோர் உடன் இருந்தனர்.