திருச்சியில், ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ தலைமையில், கர்நாடகா அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சை மண்டலம் பாத்திரம் ஏந்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை வாரியம் சொல்வதை பொருட்படுத்தாமல், கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுக்கிறது. இதனால், தஞ்சை மண்டலத்தில் 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி விட்டன. காவிரி நதி நீர் விவகாரத்தில், மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்தும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்வதற்காக, கொண்டு வரப்பட்ட ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு போதிய நிதிழை வழங்காமல், ஏழை எளிய மக்கள் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் 16 கோடி பேர், ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு, 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்றால், 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்க வேண்டும். ஆனால், ஆண்டுக்காண்டு நிதியை குறைத்து வருகிறது. அதனால், கிராமப்புற ஏழை எளிய மற்றும் பட்டியல் இன மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த 100 நாள் வேலை திட்டத்துக்கு போதுமான நிதியை வழங்க வேண்டும். தமிழகத்தை பாதிக்கும் காவிரி பிரச்னைக்காக மட்டுமின்றி, 100 நாள் வேலை திட்டத்துக்காகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. விவசாய தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும், வட மாநில தொழிலாளர்களை கொண்டு விவசாய பணிகள் மேற்கொள்ளப் படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஊரக வேலை வாய்ப்புத் திட்ட தொழிலாளர்களுக்கு மொத்தமாக 50 நாட்கள் கூட வேலை கிடைக்கவில்லை. சில கிராமங்களில் 20 நாட்கள் கூட வேலை கொடுப்பதில்லை, என்கின்றனர். இதை பற்றி தமிழகத்தில் யாரும் பேசவில்லை.
ஊரக வேலை வாயப்புத் திட்டத்தில் ஏற்பட்டு பாதிப்பு பற்றி ம.தி.மு.க., தான் பேசுகிறது. கடந்த ஆண்டு 72 ஆயிரம் கோடி, தற்போது, 60 ஆயிரம் கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கான வேலை வாய்ப்பை படிப்படியாக குறைத்து வருகின்றனர். அடுத்து நான்கு, ஐந்து ஆண்டுகளில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டமே இருக்காது. தமிழத்தில், வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கத் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால், இப்படியே போனால், ஊரக வேலை வாய்ப்புத் திட்டமே இருக்காது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், தமிழக அரசு தரப்பில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்துள்ளனர். நீர் மேலாண்மை வாரியம், ஒன்றிய அரசிடமும் முறையிட்டுள்ளனர். சட்டரீதியான அனைத்து நடவடிக்கையையும் மேற்காண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையை செயல்படுத்த மறுத்தும் கர்நாடகா அரசுடன் சண்டைக்கா போக முடியும். ஒன்றிய அரசு, நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடகா அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் தேர்தலுக்காக, பா.ஜ.,வுக்கான வாய்ப்புகளை கெடுத்து விடக் கூடாது, என்பதற்காகவே ஒன்றிய அரசு தலையிடாமல் உள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, ஏக்கருக்கு 13 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளனர். குறைந்த பட்சம் 20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. மாநில அரசு, விவசாயிகளின் அவல நிலையை புரிந்து கொண்டு, குறைந்த பட்சம் 20 ஆயிரம் ஒதுக்க வேண்டும். நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், என்ற கோரிக்கையை முதல் முதலில் வலியுறுத்தியதோடு, ஒரு நபர் மசோதாவை கொண்டு வந்தவர் வைகோதான்.
அந்த திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், இந்த பிரச்னையே ஏற்படாது. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசையும் சேர்த்துத் தான் கண்டிக்கிறோம். முதன்மை அதிகாரம் ஒன்றிய அரசிடம் இருப்பதால், அவர்கள் அழுத்தம் கொடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள அரசியல் காரணமாக, கர்நாடகாவில் உள்ள பா.ஜ., கட்சியினர் தண்ணீரை திறக்கக் கூடாது என்று தானே போராட்டம் நடத்துகின்றனர். கூட்டணி முடிவு பற்றி தலைவர் தான் முடிவு எடுப்பார். அதே சமயம் ம.தி.மு.க., சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியேறியதால், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் அங்கு செல்லலாம் என்ற மாயையை ஊடகத்தினர் தான் உருவாக்கி உள்ளனர். அந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதற்கும், தி.மு.க., கூட்டணியில் பாதிப்பு வருமா என்பதற்கும் சம்பந்தமே இல்லை. லோக்சபா தேர்தலில், கூட்டணி தர்மத்தில் முழு நம்பிக்கை வைத்துள்ள எங்களுக்கு யார் வெற்றி பெறக் கூடாது என்பது தான், கூட்டணியின் நோக்கம். பா.ஜ., வில் இருந்து பிரிந்ததால், சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கிடைக்கும் என்ற ஆசை பழனிச்சாமிக்கு இருக்கிறது. எந்தக் கூட்டணி நல்லது என்பது சிறுபான்மை மக்களுக்கு தெரியும். கடந்த ஒரு மாதத்தின் நிகழ்வுகளை வைத்து எதுவும் சொல்லி விட முடியாது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.