இந்திய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குத்திருட்டு நடந்திருப்பதை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். மேலும் இந்த வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டை கண்டித்து பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது
அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மலைக்கோட்டை கோட்டம் சார்பில் மெயின் காட் கேட் அருகே வாக்குத்திருட்டை தடுப்போம் ஜனநாயகத்தை காப்போம் ஓட்டு உரிமையை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு மாவட்டத் தலைவரும் கவுன்சிலருமான ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்து மீட்பு குழுவின் தலைவருமான கே.வி. தங்கபாலு கலந்துகொண்டு வாக்கு திருட்டுக்கான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாக்கு திருட்டுக்கான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் திருச்சி காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி, மலைக்கோட்டை கோட்ட பொதுச்செயலாளர் முகமது ஆரிப், ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல் காட்டூர் கோட்டத் தலைவர் டானியல் ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.