கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் முனைப்பில் அரசியல் நிகழ்வுகளை அடுத்தடுத்து நடத்தி வருகிறார் திரைப்பட நடிகர் விஜய் உலக பட்டினி தினத்தன்று 234 தொகுதிகளிலும் இலவச உணவு வழங்க திட்டமிட்டு, தனது மக்கள் இயக்கத்தினரை களத்தில் இறக்கினார்.12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ஊக்க தொகை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து நிர்வாகிகளை சந்தித்து ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசித்தார்.
இந்நிலையில் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தளபதி” யின் சொல்லுக்கிணங்க இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் தமிழகத்தில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு மலர் மாலை சூட்டி மரியாதை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
அதன்படி கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாளான இன்று திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அவரது திரு முழு உருவ சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக திருச்சி மத்திய மாவட்ட தலைவர் செந்தில், தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.