திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்ட அரங்கிற்குள் நுழைந்த விவசாயிகளில் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் ம.ப.சின்னதுரை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடத்திய தர்ணா போராட்டத்தின் போது காவல்துறையினர் அவரது சட்டையை கிழித்து அராஜக முறையில் நடந்து கொண்டதை கண்டித்து அரங்கிற்குள்ளே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் கிழிந்த சட்டையை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து உடனடியாக இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்தார். மேலும் அவருக்கு ஆதரவாக மற்ற சங்கங்களை சேர்ந்த விவசாயிகளும் அவருடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவாதம் அளித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ம.ப.சின்னதுரை கூறும்போது.., லால்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தன்னை காவல்துறையினர் காலால் எட்டி உதைத்து சட்டையை கிழித்து போராட்டத்தில் ஈடுபட விடாமல் தடுத்தனர்.திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், குமுளூரில் அரசுக்கு சொந்தமான 30 ஏக்கர் தரிசு நிலம் மற்றும் 600 பனைமரம் மற்றும் சோழர்கள் கால கல்வெட்டுடன் கூடிய சிவன் கோயில் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பாதை ஆகியவற்றை தடுப்புகள் அமைத்து தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமித்து வைத்துள்ளது இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இதற்காக லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் போராடிய என்னை பூட்ஸ் காலால் எட்டி உதைத்து எனது சட்டையை கிழித்து போராட்டம் நடத்த விடாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். லால்குடி பகுதியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் தனியார் நிறுவனத்திற்கு துணை போகிறார்கள் உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறினார்.