திருச்சி காமராஜ் நகர் அப்துல் கலாம் ஆசாத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 34). பெற்றோரை இழந்த இவர் காட்டூர் எம்.ஜி.ஆர். ராஜவீதி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அவரின் வீடு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்த அந்த வீட்டின் ஜன்னல் கதவை திறந்த போது துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ரவிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது படுக்கையறையில் பாண்டியன் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் விஷம் அருந்தி இறந்தாரா? அல்லது இயற்கை மரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.