108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரைத் திருவிழாவின் 5 ஆம் நாளான இன்று மாலை நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.முன்னதாக நம்பெருமாள் ரெங்க விலாச மண்டபத்தில் இருந்து அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளினார்.
அதனைத் தொடர்ந்து சித்திரை வீதிகளில் வலம்வந்து பின்னர் வாகன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து, அதன்பிறகு மூலஸ்தானம் சென்றடைந்தார்.சித்திரை வீதிகள் வழியாக அனுமந்த வாகனத்தில் வலம் வந்த நம்பெருமாளை பெரும் திரளான பக்தர்கள் வழிநெடுகிலும் நின்று ரெங்கா..! ரெங்கா..! என பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, திருச்சி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.