ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் பெருமாள் கோவிலில் சகஸ்ரதீபம் மற்றும் சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது. கார்த்திகை மாதம் என்றாலே விளக்குகள் ஏற்றி வழிபடுவது ஐதீகம். குறிப்பாக வைணவக் கோவில்களில் இம்மாதத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபடும் சகஸ்ரதீப வழிபாடு நடைபெறும். இதனால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இவ்வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபக்கோவிலான காட்டழகிய சிங்கர் பெருமாள் கோவிலில் நேற்று மாலை சகஸ்ரதீப வழிபாடு நடந்தது. ஆழ்வார்திருநகரி ரெங்கராமானுஜ ஜீயர் குத்து விளக்கேற்றி சகஸ்ர தீப விழாவை துவக்கி வைத்தார். சகஸ்ர தீபத்தையொட்டி கோவில் மண்டபங்கள், பிரகாரங்கள், நந்தவனம் உள்பட கோவில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை ஆயிரக்கணக்கான விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வைத்து வழிபட்டனர்.

கோவில் வளாகத்தில் இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, நாம சங்கீர்த்தனம், உபன்யாசம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக உற்சவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் மற்றும் மாருதி நண்பர் குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *