ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 4ம் திருநாளான 5 -ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் 8ம் நாளான நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரைவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 5 மணிக்கு வந்தார்.

காலை 5 மணிமுதல் காலை 5.45 மணிவரை ரதரோஹணம்(மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.15 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகளில் வழியாக மீண்டும் நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *