108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப் படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடந்தாலும் வைகுண்ட ஏகாதசி விழா உலக சிறப்பு வாய்ந்தவையாகும். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 30 – ந் தேதி திரு நெடுந் தாண்டகத்துடன் தொடங்கியது. அதனை அடுத்து 31-ந் தேதி முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கி நடைபெற்று வந்தது. பகல் 10 உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் நம் பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந் தோறும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்து நம்பெருமாளை வழிபட்டு சென்றனர். பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று நாச்சியார் திருக்கோலம் என்கிற மோஹினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வைகுண்ட ஏகாதேசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 5.16 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.15 மணியளவில் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து சிம்ம கதியில் புறப்பட்டார். தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழி கேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வருகை தந்து, துரைப்பிரதட்சணம் வழியாக சொர்க்கவாசல் பகுதிக்கு வருகை தந்தார். 5.1 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும். நம் பெருமாள் பக்தர்கள் புடை சூழ சொர்க்க வாசலை கடந்து, ஆயிரங் கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பலலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு 2.5 லட்சம் பக்தர்கள் வருகை தந்த நிலையில் இந்த ஆண்டு மூன்று லட்சம் மக்களுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவில் உட் பிரகாரத்தில் முக்கிய இடங்களில் 110 சிசிடிவி கேமராக்களும் கோவிலை சுற்றி வெளிப்புறத்தில் 100 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு கோவில் புறக்காவல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.மேலும் 70 ஆயிரம் குற்றவாளிகளின் புகைப்படங்களை அடையாளம் காணும் மென்பொருள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. யாரேனும் குற்றவாளிகள் நடமாடினால் அதனை கேமராக்கள் மூலம் குற்றவாளியின் முகங்களை ஸ்கேன் செய்து ஒப்பீடு இருந்தால் காவல்துறைக்கு எச்சரிக்கை ஒலி ஏற்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகள், தோரணங்களால், வண்ண துணிகளால் வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. மூலஸ் தானம் செல்லும் கொடி மரம் மலர் தோரணங்களால் அலங் கரிக்கப்பட்டு இருந்தது. அதே கோவில்கோவில் வெளி பிரகாரத்தில் பக்தர்கள் வரிசையில் செல்வதற்கு ஏதுவாக நிழல் பந்தல் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி கழிப்பட வசதி போன்ற அனைத்தையும் தேவையான அளவு கோவில் வளாக மற்றும் வெளிப்பிரகாரங்கள் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.இன்று தொடங்கும் ராபத்து நிகழ்ச்சி வருகிற 16-ந் தேதி திருக்கைத்தல சேவை 17-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி , 19-ந் தேதி தீர்த்தவாரி, 20-ந் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவடைகிறது.