இஸ்லாமிய பெண்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் ஹிஜாபை அகற்றி விட்டு பள்ளி கல்லூரிகளுக்கு வரவேண்டும் என தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற போக்கை கண்டித்து. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் திருச்சி கோகினூர் தியேட்டர் சிக்னலில் இருந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் பேரணியாக நடந்து வந்து திருச்சி தில்லைநகர் ஏழாவது கிராஸ் சாலையில் உள்ள கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த முற்றுகை போராட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக திருச்சி மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளரும், கவுன்சிலருமான பைஸ் அஹமது, மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக இன்று காலை முதல் கர்நாடக வங்கி திறக்கப்படவில்லை மேலும் அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அவரை தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் முகமது ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:-
முஸ்லிம் சமூகம் தொடர்ந்து இந்த பிஜேபி ஆட்சியில் ஒடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிஜேபி அரசு ஆளும் கர்நாடக மாநிலத்தில் உள்ள நீதிமன்றங்களின் நீதிபதிகளை பிஜேபி அரசாங்கத்தின் நீதிபதிகளாக மாற்றி வருகிறது. இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்த கண்ணியமாக சாலையில் நடந்து சென்று வருகின்றனர். ஆனால் கர்நாடகாவில் ஆளும் பிஜேபி அரசு வேண்டுமென்றே இஸ்லாமியப் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ஹிஜாபை அணிய தடை விதித்தது கண்டனத்துக்குரியது. மேலும் இதே நிலை தொடருமானால் கர்நாடக அரசை கண்டித்தும் முதல்வரை கண்டித்து தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு கர்நாடகா செல்ல தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.