35 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவுறுத்தலின் பேரில். லால்குடி கோட்ட காவல்துறையினர் சார்பில் லால்குடி ரவுண்டானாவில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. லால்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அஜய்தங்கம் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் லால்குடி, கல்லக்குடி, சிறுகனூர், சமயபுரம், கொள்ளிடம் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், ஆண், பெண் காவலர்கள் மற்றும் சமயபுரம், லால்குடி போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர். பேரணி லால்குடி ரவுண்டானாவில் இருந்து தொடங்கி சிறுதையூர்- கொள்ளிடக்கரை சாலை ரயில்வே மேம்பாலம் வழியாக லால்குடி சிவன் கோவில், சந்தைப்பேட்டை வழியாக லால்குடி ரவுண்டானம் சென்றடைந்தனர்.
இதில், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், மோட்டார் சைக்கிளில் செல்வோர் ஹெல்மெட், கார் ஓட்டுபவர்கள் சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்திக் கொண்டு சென்றனர்.
முன்னதாக லால்குடி பகுதியில் உள்ள பொது மக்களிடம் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரச்சாரங்களை லால்குடி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் வழங்கினார். மற்றும் லால்குடி காவல் ஆய்வாளர் உதயகுமார் சமயபுரம் போக்குவரத்து ஆய்வாளர் தாமஸ் ராஜன் லால்குடி போக்குவரத்து ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்….