தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனையும், சிகிச்சையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு முயற்சி எடுத்தாலும் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு ஒருநாளைக்கு 25 ஆயிரத்தை நெருங்கி கொண்டு வருகிறது. அதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதனால் இன்று முதல் மே 31-ஆம் தேதி வரை 37 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து காரைக்குடி, மதுரை, திருச்சி, ஈரோடு, கோவை, நாகர்கோவில், பெங்களூரு, திருவனந்தபுரம், ஜோலார்பேட்டை, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.